Saturday 10 October 2015

வல்லரசு

பல படங்களில் விஜயகாந்தும், காலமாவதற்கு முன்பு வரை கலாம் அவர்களும் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று விருப்பமும் கனவும் கொண்டார்கள். இவர்களை தலைவர்களாக வரித்து கொண்ட ரசிகர்களும் தொண்டர்களும் கூட அவ்வாறே எண்ணினார்கள்.

நம்ம மக்களும் அப்பப்போ இந்தியாவுல சில அபத்தங்கள் நடக்கும் போதெல்லாம் இப்படி இருந்தா இந்தியா எப்படி வல்லரசாகும்னு இணையத்துல கோவத்தை எல்லாம் கொட்டிட்டு தூங்க போயிடுறாங்க.

எனக்கு இதுல சில கேள்விகளும் சந்தேகங்களும் இருக்குங்க.

1. வல்லரசுனா என்ன?
2. ஒரு நாடு வல்லரசாவதற்கு உண்டான தகுதிகள் என்ன?
3. இந்தியா ஏன் வல்லரசு ஆகணும்?
4. அப்படி இந்தியா வல்லரசு ஆகுறதுக்கு இன்னும் என்ன எல்லாம் நடக்கணும்?
5. அதுல இந்திய குடிமகனா ஒவ்வொரு இந்தியனோட கடமை என்ன?

-- சுதந்திரன்

Tuesday 3 July 2012

பூந்தோட்டம்

மண்ணின் மேல்புறம்
சிமெண்ட் பூச்சு,
அதன் மேல்
தொட்டியில் பூச்செடிகள்!

மாநகரங்களின்
பூந்தோட்டங்கள்!

குருவி

விரட்டி அடிக்கப்பட்ட
காக்கை குருவிகளை,
அமாவாசை தினத்தில்
கரைந்து அழைத்தேன்!
மாநகர குடியிருப்பின்
மொட்டை மாடியில்,
செல்போன் டவர்களுக்கு
மத்தியில் நின்றபடி!

Saturday 23 June 2012

கோபம்

காந்தியின் மீது
அவனுக்கு என்ன கோபமோ,
தலையில் குத்துகிறான்
தபால் ஊழியன்!

- சுதந்திரன்

விசுவாசம்

விலை குறைத்து கேட்டதனால்
விசுவாசமாய் கடிக்கிறதோ,
புதிதாய் வாங்கிய செருப்பு!

- சுதந்திரன்

தந்தையுமானவன்

ஈன்ற பொழுதின்
பெரிதுவக்கும் தருணத்தை
என் மனைவிக்கு
பரிசாகத் தந்துவிட்டு

ஈரக்கண்ணாகிப் போன
என் ஓரக்கண்ணை
ஒற்றை விரலால்
ஒற்றி எடுத்துவிட்டு

சொல்லொண்ணா பூரிப்போடும்
எழுதவொண்ணா சந்தோஷத்தோடும்
இன்று புதிதாய் அலர்ந்த
என் இளவரசனை
பெருமிதத்தோடு
பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

நேற்று வரை,
அம்மாவுக்கு பிள்ளையாகவும்
நண்பனுக்கு தோழனாகவும்
மனைவிக்கு கணவனாகவும்
இருந்த நான்

இன்று முதல்
என் இளவரசனுக்கு
"தந்தையுமானவன்"!

- சுதந்திரன்